நண்பர் சிராஜ் அவர்கள் “பிளாக் உலகை சீர்திருத்த வந்த தீவிரவாதியே காதல் திரைப்படங்களினால் ஓடும் ஆண் பெண் இளைஞர்களுக்கு தங்கள் அறிவுரை என்ன? தங்களால் இவர்களை சீர்திருத்த முடியமா” என்ற கேள்வி கேட்டிருந்தார்.
நண்பர் சிராஜ் அவர்களே… உங்கள் வருகைக்கும், கேள்விக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரிதாக்குகிறேன். என் அனுபவ ரீதியாக, கற்றுக்கொண்ட விடயங்களை அறிவுரையாக எழுத விரும்புகிறேன். அதேவேளையில், அவர்களை சீர்திருத்தும் கருத்துக்களை சொல்லத்தான் முடியுமே தவிர, திணிக்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைப்படங்கள் என்பது நடைமுறை வாழ்க்கையில் உள்ள சம்பவங்களாக இருந்தாலும், கற்பனைக் கதையாக இருந்தாலும், வரலாற்றுக் கதையாக இருந்தாலும், அதில் கற்பனையே அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. கலர்ஃபுல்லாக, கவர்ச்சியாக, வியாபார நோக்குடன் தன் படம் வெளியிடப்படுகிறது. அதேவேளையில் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் இருக்கும். சமுதாயத்தை சீர்திருத்துவதற்காக என்று சொன்னாலும், அதுவும் ஒரு வியாபாரம் தான். வியாபார நோக்கத்துடன் எல்லா வகையான விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு கோப்பு ஆகும்.
அதில் நல்ல, கெட்ட (பர்வைக்கு ஏற்றாற்போல மாறுபடும்) விடயங்கள் எல்லாம் கலந்த கலவையாகத்தான் இருக்கும். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்றாற்போல பல நுணுக்கங்களை நடைமுறைப்படுத்தப் படுகிறது. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சங்களில் ஒண்றாகத்தான் அமைந்துள்ளது என்றே நான் கருதுகிறேன். நடைமுறை வாழ்க்கைக்கு அதில் உள்ள நல்ல விடயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளலாம், அதுவே சாத்தியமானதாகவும் இருக்கும். தேவையில்லாதவற்றை அந்த 3 மணி நேரங்களிலேயே மறந்து விட வேண்டும்.
அதைவிடுத்து, சினிமாவிலேயே மூழ்கினால் நம்மையே சீரழித்து விடும் (அளவுக்கு அதிகமானால் பிரசாதமும் விஷம்தானே!).இன்றைய சூழலில் இருக்கும் இளம் பெண்கள் / வாலிபர்கள் அதில் வரும் தேடல் ,காதல், ஊடல் , ஓடல் போன்ற காட்சிகளைப் பார்த்து அதேபோல என் காதல் அமையாதா?,அதேபோல என் வாழ்க்கை அமையாதா?, அதே போல எனக்கு அழகான, அன்பான ஜோடி கிடைக்காத என்று ஏங்குவது உண்டு. படத்தில் உள்ள தங்களுக்குப் பிடித்த சம்பவங்களைத் தங்களுடைய வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏக்கம் கொள்கிறர்கள். நடப்பது போல கற்பனை செய்கிறார்கள் (கற்பனையில் மூழ்குபவர்கள் எளிதாக காதல் வலையில் விழுந்து விடும் வாய்ப்புகள் அதிகமாக உண்டு).
“நாம் செய்ய ஆசைப்பட்டும், செய்ய முடியாத விடயங்களை கண் முன்னே வெள்ளைத்திரையில் ஒருவர் செய்யும் போது, நாமே செய்வது போல ஒருவித உணர்வுக்கு ஆளாகிறோம். அதாவது அநியாயம் நடக்கும் போது 10 பேரை நம்மால் அடிக்க முடியாது. ஆனால் படத்தின் நாயகன் அடிப்பார். இதை நாம் அடிப்பது போல எண்ணி பார்க்கிறோம். காதல் காட்சிகளில் கவிதைகள், பாடல்கள், என உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வரிகள் இருப்பதால், அதில் மூழ்கிவிடுகிறோம் (காதலில் தோற்றவர்கள் சினிமாவில் உள்ள சோகமான காதல் பாடல்களைக் கேட்டு, அந்த பாடல் போல் தங்களுடைய வாழ்க்கை அமைந்து விட்டது போல எண்ணுவது உண்டு)”
சினிமாவில் உள்ளாது போல காதல் செய்ய எண்ணி பலர் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள். காதலிப்பது தவறான செயல் அல்ல. காதலால் இந்த உலகமே இயங்குகிறது. அதேவேளையில் சினிமாவில் வருவது போன்ற காதல் அமைவது குறிஞ்சி மலர் பூப்பது போல அபூர்வம் என்று கருதுகிறேன்.
காதலர்களுக்கு சில ஆலோசனைகள்:
காதல் செய்வது தவறு கிடையாது. வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றோர்களை விட உங்களுக்கு உண்டு. ஜோடியைத் தேர்ந்தெடுக்கும் போது பல தடவை, பல கோணங்களில் அலசி, ஆராய்ந்து, தெளிவான முடிவு எடுக்கப்படவேண்டும். நம் வாழ்க்கையில் இறுதி வரை வரும் உறவு அல்லவா. அதை சரியாக தீர்மானிக்கா விட்டால், வாழ்க்கை நரகமாக அமைந்து விடுமல்லவா.
என்னைப் பொறுத்தவரை சில வருடங்களாவது நமக்கு / குடும்பத்துக்கு அறிமுகமான நபரை தேர்ந்த்தேடுத்தால் நல்லது. இதனால் ஓரளவு அவர்களைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அதை விட்டு ‘கண்டதும் காதல்’ என்பது எல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு சரியாக இருக்காது. சினிமாவுக்கு மட்டும் தான் பொருந்தும் (சினிமாவில் அழகில்லாத நாயகி / நாயகன் நடித்த படங்கள் வந்திருக்கிறதா? இல்லை, அழகான நாயகி / நாயகன் மேக்கப் மூலம் அழகில்லாமல் காட்டப்படுவர்).
காதலும் வாழ்க்கைக்குத் மிக முக்கியமான் தேர்வு என்றே எண்ணுகிறேன். இத்தேர்வில் காதலிக்க முன்னமே சில வினாக்களுக்கு பதில் அளிக்கப்படவேண்டும். காதலிக்கும் காலங்களிலும் சில கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டும். வாழ்க்கைத் தேர்வில் மதிப்பீடு செய்யும் உரிமை பெற்றோருக்குக்கூட குறைவாக இருப்பதாகவே கருதுகிறேன். அதனால் தான் இந்த தேர்வு, எழுதுபவர்களே மதிப்பீடும் (திருத்துதல்) செய்யயும் அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தவறாக மதிப்பீடு செய்தால், ஏற்படும் பாதிப்புக்களுக்கான தன்னையையும் அவர்களே ஏற்கவேண்டும். சரியான முறையில் மதிப்பீடு செய்து காதலித்தால், காதலும் வெற்றி பெறும். அதேவேளையில் வாழ்க்கையும் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
அதாவது காதலிக்க தேர்ந்தெடுக்கும் நபர்களைப் பற்றி அலசி ஆராயவேண்டும். அதாவது, தேர்ந்தெடுக்கும் நபர் நமக்கு ஏற்றவரா? நமது குடும்பத்துக்கு ஏற்றவரா? நமது குடும்பத்தின் நிலை (தராதரம், இனம், மொழி) என்ன?அந்த நபரின் குடும்பத்தில் காதலை ஏற்றுக் கொள்வார்களா? அந்த நபரை தன்னுடைய குடும்பம் ஏற்றுக் கொள்ளுமா? போன்ற பல கேள்விகளைக் கேட்கவேண்டும்.
அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விட, அன்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் (சினிமாவில் அழகுக்குத் தான் முக்கியத்துவம், ஹீரோவும் அழகனாக இருப்பார், ஹீரோயினும் அழகியாக இருப்பார். ஹீரோ, ஹீரோயினைத்தான் காதலிப்பார்). காதல் செய்தால் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடலாம். இது பல காதலர்களை (சினிமாவில் கூட) பார்த்து தெரிந்துகொண்ட விடயம். பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். பல பிரச்சினைகள் வரலாம். நாம் சாரியான ஜோடியைத் தேர்ந்தெடுத்தால் பிரச்சனைகளுக்கான வாய்ப்புகள் குறைந்து விடும் என்றே கருதுகிறேன்.
ஓடிபோய் திருமணம் செய்யும் யோசனைக்கு இங்கே இடம் கிடையாது. ஒருமுறை நடக்கும் திருமண சந்திப்பு பலர் ஆசியுடன் நடந்தால் எப்படி இருக்கும். அதைவிடுத்து ஓடிப்போய் மணம் செய்து உறவுகளை இழந்து. வாழ்க்கையில் கஷ்டப்படு, துன்பங்களை அனுபவிப்பது எல்லாம் தேவைதானா?.
காதலிப்பவர்களே.. காதலிக்க தயாராகும் நண்பர்களே… இதை நான் யாரையும் வற்புறுத்தவோ.. திணிக்கவோ எழுதவில்லை. நண்பர் சிராஜ் அவர்களுக்காக என் இதயம் சொன்ன கருத்துக்களே..!
தற்போது, இந்தியாவில் விவாகரத்து வழக்குகள் அதிகமாக இளைய தலைமுறையுடையது. அதுவும் திருமணம் முடிந்து ஒருசில வருடங்களுக்குள் உள்ள ஜோடிகள்தான் விவாகரத்து வழக்குகளில் அதிகமாக உள்ளதாக செய்திகள் வெளிவருகிறது. அதிலும் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் காதலித்து திருமணம் செய்தவர்கள் தான் அதிகம் என்று தெரிவிக்கின்றன. சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே..!
எல்லாம் நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க…. ஆனா //தராதரம், இனம், மொழி// இது எந்த வகையில வருதுன்னு புரியலீங்களே.
வேறு மொழி, இனம், மதத்தில உள்ளவங்களை காதல் செய்யக்கூடாதுங்கிறீங்களா?
By: ஊர்சுற்றி on ஜூலை 18, 2009
at 4:05 பிப
நண்பர் ஊர்சுற்றி அவர்களே…
இங்கே நான் குறிப்பிட்ட //தராதரம், இனம், மொழி// என்பது, காதலிப்பதற்கு முன்பே அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து காதல் செய்தால் பாதிப்பு இருக்காது. அதேவேளையில் வெற்றியும் அடையும். பெற்றோர்களும் சந்தோஷப் படுவார்கள். என்பதைக் குறிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் மட்டுமே தவிர வேறு எந்த விதமான நோக்கமும் கிடையாது.
நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று கருதுகிறேன்
By: bloggun on ஜூலை 20, 2009
at 6:53 முப