தமிழில் சிறுவர் இலக்கியத்தில் உள்ள வறட்சிக்கு ஈடாக, தமிழ் சினிமாவிலும் சிறுவர் திரைப்படங்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ண வேண்டிய அவசியம் கூட இல்லாத அளவுக்கு மிகக் குறைவாக இருப்பது, நம் சிறார் சமூகத்துக்கு மட்டுமின்றி, நமக்கு நாமே செய்து கொள்ளும் துரோகம்!
குழந்தைகள் உலகம் பெரிது. பெரிது என்றால் அளவிடவே முடியாத அளவு விஸ்தீரணம் கொண்டது. ஆனால், அந்தக் குழந்தைகள் உலகத்தை இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், கம்ப்யூட்டர் விளையாட்டுகளும் மிகுதியாக அபகரித்துக் கொண்டிருக்கிறது.
ஐன்ஸ்டீனிடம் இருந்த குழந்தை மனோபாவம் தான் இயக்கவியல் கோட்பாடு உருவாகக் காரணமானது, அவரைப் போல் சிறுவர்களின் ஆர்வம் நிறைந்த எண்ணங்களைக் கொண்ட கலிலியோ, டெலஸ்கோப் மூலம் கோள்களைக் கண்டார். இதுபோல பல உதாரணங்களைச் சொல்லலாம். மொத்தத்தில் சிறார்களே உலகின் ஒளி என்று கூறினாலும் அது மிகையானது அல்ல.
இந்த மகத்துவத்தை அறிந்து கொண்டதால்தான் என்னவோ, குழந்தை இலக்கியத்துக்கு நம் முன்னோர்கள் அதிக முக்கியத்துவம் தந்தனர். தாலாட்டில் தொடங்கி குழந்தைகளுக்கு ஊட்டப்படும் கதைகளும் பாட்டுகளும் உலகின் வேறெந்த நாட்டை விடவும் நம் பண்பாட்டில் அதிகம். எழுதப்படாத வாய்மொழி மரபில் பிள்ளைகளுக்காக நம் முன்னோர்கள் உருவாக்கியது ஏராளம். ஆனால், அந்த வழியைப் பின்பற்றி, சிறுவர் இலக்கியம் படைக்க நம்மவர்கள் இப்போது தயங்குவது கூட ஒரு வகையில் அறியாமைதான்.
விரல்விட்டு எண்ணக்கூடிய சில குழந்தை எழுத்தாளர்கள் இருந்தால் கூட, அவர்கள் குழந்தைகளுக்கு தங்கள் படைப்புகளின் வாயிலாக அறிவுரைகள் மட்டுமே வழங்கி வருவது வருத்தத்துக்குரியது!
இருபத்து நான்கு மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ராமானுஜத்தின் ‘ஃபோக் டேல்ஸ் ஆஃப் இந்தியா’, வெர்ரியர் எல்வினின் ‘வென் தி வோர்ல்ட் வாஸ் யங்’ போன்ற புத்தகங்கள் இன்றைக்குக் கூட சிறப்பாக போற்றப்படுவதற்குக் காரணம், அந்தக் கதைகளில் குழந்தை இலக்கியத்துக்குரிய ஜீவன் மிகுந்திருப்பதே!
என்ன இது? ‘பசங்க’ பற்றி கூறுவதாகச் சொல்லிவிட்டு சிறுவர் இலக்கியம் பற்றி விவரிக்கிறேன் என்று கேட்பது என் செவிகளில் விழுகிறது… காரணமில்லாமல் சொல்லவில்லை…
குழந்தைகளுக்காக எழுதுவதை அற்பவேலை அல்லது முடியாது என்று இன்றைய படைப்பாளிகள் பலர் கருதுவதாகவே எண்ணுகிறேன். அதைப் போலவே சிறுவர் சினிமாவை எடுக்க நம் சினிமா படைப்பாளிகள் முனைவதில்லையே என்ற கோபத்தை வெளிப்படுத்தவே மேலேயுள்ள விவரிப்புகள்!
சினிமா படைப்பாளிகளின் மேலோட்டமான கண்ணோட்டத்தைத் தகர்த்தெரிந்துவிட்டு, வீரு நடை போட்டு, நம் மனத்திலே ஆழமாக குந்திக் கொண்டுள்ளது, ‘பசங்க’ என்ற தமிழ் சினிமா!
நாம் எல்லோருமே கடந்து வந்த சூழல் தான் என்றாலும், தமிழ் சினிமாவைப் பொருத்தமட்டில் கதையும் கதைக்களமும் புதிது என்றுச் சொல்வதே தகும்.
வாழ்க்கையில் எவ்வளவோ நிகழ்வுகளை கடந்து வந்திருந்தாலும், அவற்றைக் கவனித்து வந்தாலும், அதை நம் மனத்திலே பதிவு செய்வது இல்லை. அத்தகைய சம்பவங்களின் கோர்வையை இயக்குனர் பதிவு செய்திருப்பதும், அதைக் காணும் போது நம்மை அதனுள் உள்ள கதாப்பாத்திரத்துடன் பொருத்திப் பார்ப்பதும்தான் தான் ‘பசங்க’ளுடன் ஜீவனுடன் பயணிக்க வைக்கிறது.
ஒரு வகுப்பில் இரு மாணவர்கள். அவர்களுக்குள் இயல்பான வெவ்வேறு குணாதிசயங்கள். அவ்விருவரும் எதிரெதிர் வீட்டில் வசிப்பவர்கள். அவர்களது குடும்பத்துக்குள்ளும் சில உரசல்கள்… இப்படி இயல்பு மீறாத சூழலைக் கதையாக்கி, நம் மண்ணின் குழந்தைகளின் உலகத்தை திரைக்கதையாக்கி செதுக்கப்பட்டிருக்கிறது, ‘பசங்க’ எனும் மகத்தான சினிமா படைப்பு.
குழந்தைகளின் உலகத்துக்கும் பொருளாதார நிலைப்பாட்டுக்கும் மிகப் பெரிய அளவில் தொடர்பில்லாததன் காரணமாகவே, அவர்களின் உலகில் மகிழ்ச்சி மட்டுமே வியாபித்திருக்கிறது. அவர்களின் உலகை அப்படியே காட்டியதால், அம்மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்கிறது. இது, படம் முழுவதுமே பிழறாமல் தொடர்வது ‘பசங்க’ படைப்பாளிகளின் தனித்திறமை!
குழந்தைகளுக்கான படைப்புகள் என்பது அவர்களுக்கானது மட்டுமல்ல; அவ்வகையான படைப்புகள் பெரியவர்களுக்கானதும் கூட. அந்த இலக்கணத்தை மிகச் சிறப்பாக கடைப்பிடித்திருக்கிறார், இயக்குனர் பாண்டிராஜ்.
குறிப்பாக, ஒரு பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்பது ஆங்காங்கே காட்சிகளினுடே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அவையெல்லாம் அறிவுரை தொனியில் இல்லாதிருப்பதே படைப்பின் சிறப்பு. அந்தக் காட்சிகளைக் காணும் பெற்றோர்கள் தங்களையும் அறியாமல் தாங்கள் அறியா தவறுகளைத் திருத்திக் கொள்ளும் சாத்தியம் நிறையவே உண்டு.
படத்தில் என்னைக் கவர்ந்த அம்சங்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று ஒளிப்பதிவு. குழந்தைகளின் உலகத்துக்குள் புகுந்து பயணிக்க துணைபுரிந்திருக்கிறது அற்புதமான ஒளிப்பதிவு.
இசை… குறிப்பாக பின்னணி இசை… இசையில் நகைச்சுவைத் தன்மையை வெளிப்படுத்த முடியும் என்று இந்தப் படத்தில் இருந்து புரிந்து கொண்டேன். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சிறார்களிடையே நடக்கும் செல்ல மோதல் காட்சிகளின் போது பயன்படுத்தப்பட டிபிகல் ஸ்டன்ட்டுக்கான பின்னணி இசை!
சினிமா என்பது ஒரு குழு மனப்பான்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கலை வடிவம் என்பதையும், ஒரு தரப்பு பிசகினால் கூட எதிர்மறை விளைவுகளுக்கு ஆளாக நேரிடும் என்பதையும் மிகத் துல்லியமாக சொல்லும் இப்படம், குழு முயற்சிக்குக் கிடைத்த முழு வெற்றி என்றே சொல்வேன்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தொடங்கும் போது ஏற்படும் ஒரு சம்பவம் சினிமாத்தனம் கொண்டது என்று என் நண்பர் ஒருவர் சொன்னான். நான் திருப்பிக் கேட்டேன், “சினிமாத்தனம் இல்லாத ஒரு பொருளை எப்படி சினிமா என்று அழைப்பது?” என்று.
பசங்க… பசங்க, பெரியவங்களுக்கான படம் மட்டும் அல்ல… அர்ப்பணிப்புடனும் நம்பிக்கையுடனும் அணுக மறுக்கும் கதைக்களத்தை நாடத் தூண்டும் சக சினிமா படைப்பாளிகளுக்கான படமும் கூட!
(குறிப்பு : ஜெட்லியின் மனம் வருந்தும் படி நடந்து கொண்டதற்கு இந்த பிளாக்கன் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறான். பிளாக்கன் என்ற வலைப்பதிவு… ஏதோ ஒரு புது முயற்சியாகவே கருதினேன். வேண்டுமென்றே எழுத்துப் பிழையுடன் எழுதி, சக பதிவர்கள் அனைவரையும் கலாய்ப்பதற்கானதாகவும், அதேநேரத்தில் சுடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுவோரை ஜாலியாக சாடுவதற்கானதாகவும் பயன்படுத்தினேன். ஓரளவு வரவேற்பு இருப்பதை மறுப்பதற்கில்லை. சினிமா விமர்சனம் என்று போடாமல் ‘பார்வை’, ‘எண்ணம்’ என்கிற ரீதியில் போடுங்கள் என்று கொஞ்சம் கூடுதல் டெரராக நடந்து கொண்டேன். என்னிடம் சொந்தச் சரக்கில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. என்னிடம் சரக்கு இருக்கிறது என்று நானே நம்புகிறேன் என்பதைச் சொல்லவே, அண்மையில் எனக்கு மகிழ்வூட்டிய பசங்க படத்தைப் பற்றி இங்கே பதிவிட்டுள்ளேன். இந்த வீம்பு, ஒரு வகையில் குழந்தைத் தனமாக இருந்தாலும் அப்படி இருப்பதும் மகிழ்ச்சியே. இந்தப் பதிவைத் தவிர்த்து இனி வரும் பதிவுகள் அனைத்துமே வழக்கமான பிளாக்கன் பாணியில் தான் இருக்கும் என்பதையும் உறுதி கூறுகிறேன்)
appadiyaa
By: pukalini on ஜூலை 3, 2009
at 1:51 பிப
pukalini மேடம்……..
பிளாக்கனும் அரிவு ஜீவி என்பதை நிறுவிப்பதற்காகவே, இந்த இடக்கையை பதிவு செய்தேன். ஆனால், தொடர்ந்து பிளாக்கனின் டெரர் பதிவுகள் தொடரும்
இதெப்படி இருக்குது…….
By: bloggun on ஜூலை 7, 2009
at 4:17 முப
அழகான இடுகை. படத்தைப் பற்றிய நேர்மையான பார்வை. பிழைகளின்றி இருந்ததால் எழுதியது யாரோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க இயலவில்லை. (குறிப்பைப் படிக்கும்வரை!). அவ்வப்போது இம்மாதிரித் தரமான இடுகைகள் தரலாமே!
ஸ்ரீ….
By: ஸ்ரீ.... on ஜூலை 4, 2009
at 4:26 முப
ஸ்ரீ…. சார்…………
பிளாக்கன் தளம் என்பது டெரர், டியர் பதிவுக்காக மட்டுமே…. அதனால் தரமான இடுக்கைகள் சில நேரங்களில் மட்டுமே தரமுடியும். ஆனால் பிளாக்கன் வேறு ஒரு பெயரில் பல வருடங்களாக நல்ல இடுக்கைகளை எழுதிக்கொண்டுதான் இருக்கிறான்.
By: bloggun on ஜூலை 7, 2009
at 4:19 முப
அவ்வப்போது இம்மாதிரித் தரமான இடுகைகள் தரலாமே!//
எப்போதும் தரலாமே…
By: Sriram on ஜூலை 6, 2009
at 5:55 முப
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்துல ஏறப் போகுதுன்னு சொல்லுறீகளா?நல்லாத் தான இருக்கீரு.அப்புறம் ஏன் இப்படி?
By: Sriram on ஜூலை 6, 2009
at 5:56 முப
ஜெட்லியின் மனம் வருந்தும் படி நடந்து கொண்டதற்கு இந்த பிளாக்கன் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறான். பிளாக்கன் என்ற வலைப்பதிவு… ஏதோ ஒரு புது முயற்சியாகவே கருதினேன்.//
மன்னிக்கிறவன் மனுஷன்…மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்…ப்ளாக்கன் பெரிய மனுஷரு ஆயிட்டாருங்கோவ்…
By: Sriram on ஜூலை 6, 2009
at 6:02 முப